இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இதில் நாயகனாக புஷ்பராஜ் என்ற கேரக்டரில் அல்லு அர்ஜூன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பகத் பாசில், வில்லனாக சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கடத்தல் மன்னனாக அல்லு அர்ஜூன் நடித்திருந்தார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இதில் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார்.
புஷ்பா படத்துக்கு அபார வெற்றி கிடைத்த நிலையில், இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 275 கோடி வசூலித்தது. 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
புஷ்பா படத்தின் முதல் பாகம் ரூ. 400 கோடி மட்டுமே வசூலித்த நிலையில், உலகளவில் புஷ்பா 2 படம் மொத்தம் 1800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்திய அளவில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான படங்களில் ரூ. 1800 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை புஷ்பா 2 படம் தட்டிச் சென்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் வெளியான எந்த படமும் இந்த வசூலை நெருங்க கூட முடியவில்லை.
தியேட்டர்களில் சக்கைப் போடு போட்ட புஷ்பா 2 படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. அங்கும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விட்டது மட்டுமின்றி இப்போது ஓடிடியிலும் டிரெண்டிங்கில் உலக சாதனை படைத்திருக்கிறது.
புஷ்பா 2 ரிலீஸ்க்கு முந்தைய நாள் டிசம்பர் 4ம் தேதி பிரிமியர் ஷோ நடந்த போது அதில் நடிகர் அல்லு அர்ஜூனும் கலந்துக்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற ரசிகை உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் அந்த துயரங்களை எல்லாம் மறக்கும் விதமாக, உலகளவில் சாதனை செய்து புஷ்பா 2 படம் அல்லு அர்ஜூனுக்கு பெருமையை தந்திருக்கிறது.





