அமரன் திரைப்படம் நூறாவது நாளை நிறைவு செய்த நிலையில் அந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கான வீடியோ ஒன்றையும் தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு அடுத்த லெவலை இந்த திரைப்படம் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து அவரது மார்க்கெட் ஜெட் வேகத்தில் ஏறி இருக்கிறது. இதனை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வரும் சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்படத்திற்காக இயக்குனர் சுதா கொங்கராவை தேர்வு செய்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக உருவாகிறது.
முதலில் சூர்யாவை வைத்து தான் இந்த திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. படத்திற்கு, புறநானூறு என்றும் டைட்டில் வைக்கப்பட்டது. இதில் துல்கர் சல்மான் நஸ்ரியா நசீம் விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இந்த வாய்ப்பு செல்ல அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் நடிகர். இதில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் ரவிக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார்.
அவர் தெலுங்கு பெண்ணாக நடிப்பது அதன் அறிமுக டீசரை பார்க்கும்போதே தெரிந்தது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் கதை நகர்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருப்பது அதன் டீசரை பார்க்கும்போதே தெரிந்தது.
இந்தித்திணிப்புக்கு எதிராகவும், கல்லூரி மாணவர்களை மையமாக வைத்தும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 1965 களில் நடைபெறுவது போல் இதன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலில் சென்னையில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. அடுத்ததாக, சிதம்பரத்திற்கு படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்கு முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.





