தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உடன் நான் அடுத்ததாக பணியாற்ற இருந்த படம் குறித்து பல்வேறு தகவல்களும் யூகங்களும் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களுக்கு தெளிவு படுத்துவது எனது கடமை என்று நினைக்கிறேன். அவர்களும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் இந்த படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த 10 மாதங்களாக இந்த படத்துக்காக தீவிரமாக தயாராகியும் வந்தேன். கட்டாகுஸ்தி 2 படத்தின் வெளியீட்டுப் பிறகு இந்த படத்தின் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இந்த படத்தை தொடங்கவும் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்பட்டது. உண்மையில் தற்போது திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்சனையும் ஒன்று என்பதை திரைத்துறையினர் அனைவரும் அறிவார்கள். இந்த படத்தை சாத்தியமாக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த படத்தை இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது எனக்கும் அருண்ராஜா காமராஜூக்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும் இந்த படத்தில் இருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும்.
எப்போதும் போல அடுத்து என்ன காத்திருக்கிறது என்பதை நினைத்து நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் ஏற்றிருக்கும் நிலையில் சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த முடிவும் அப்படிப்பட்ட ஒன்றுதான். தற்போது எனது கவனம் எனது அடுத்த வெளியீடான இரண்டு வானம் படம் மீதும் என் சகோதரரின் யெல்லோ யெல்லோ டர்ட்டி பெல்லோ திரைப்படத்தின் மீதும் உள்ளது.
அதே நேரத்தில் மிகவும் சுவாரசியமான மற்றும் தனித்துவமானதான ஒரு விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன். அதற்கான அறிவிப்பை மிக விரைவில் வெளியிட உள்ளேன். தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள். இனி வரும் காலங்களிலும் அதே அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.





