நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை இயக்கியவர் தயாரிப்பாளர் தில்ராஜூ. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக, வினியோகதஸ்ராக இருந்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது தயாரிப்பாளர் தில்ராஜூதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. வழக்கமான ஷங்கர் படம், ஊழல் ஆட்சி அதிகாரம் பற்றிய ஒரு படமாக இது இருந்தது என்பது ரசிகர்களின் விமர்சனமாக இருந்தது. இந்தியன் 2 படம் போலவே, கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனால் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனம் போலவே, கேம் சேஞ்சர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில்ராஜூவுக்கும் 200 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதுவும் இந்த படத்தில் இடம்பெற்ற 5 பாடல் காட்சிகளுக்காக மட்டுமே ரூ. 75 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் அப்படி வெளிநாடு சென்று ரூ. 15 கோடிக்கு மேல் செலவு செய்து எடுத்த பாடல் காட்சியை படத்தில் காட்டாமல் விட்டதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேம் சேஞ்சர் படத்தில் பெரும்பாலான காட்சிகளை வெட்டி எறிந்து விட்டதாக ஷங்கரும் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த படத்தின் தோல்விக்கு அப்படி முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இதற்கிடையே நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி நடித்த படம் சங்கராந்தி வஸ்துனம். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரூ. 300 கோடிக்கு மேல் வசூலில் அடித்து தூள் கிளப்பியது. 72 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்த படத்துக்கு ரூ. 60 கோடி வரை மட்டுமே பட்ஜெட் செலவாகியுள்ளது. இந்த படத்தை தயாரித்த வகையில், தயாரிப்பாளர் தில்ராஜூவுக்கு ரூ. 150 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது. கேம் சேஞ்சர் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சங்கராந்தி வஸ்துனம் படம் மூலம் சரிகட்டியிருக்கிறார் தில்ராஜூ.
அதனால் இனிமேல் பெரிய இயக்குனர்களை, பெரிய ஹீரோக்களை நம்பாமல் நல்ல கதையுள்ள சின்ன பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிக்க உள்ளதாக, வினியோகஸ்தர்களுடன் நடந்த கூட்டத்தில் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் கேம் சேஞ்சர் படத்தால் பலத்த நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தயாரிப்பாளர் தில்ராஜூவுக்கு இயக்குனர் ஷங்கர் ஒரு போன் செய்து கூட ஆறுதலாக பேசவில்லை என்பதையும் தில்ராஜூ அங்கு வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.





