இறுதிச்சுற்று சூரரைப் போற்று ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா, பராசக்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். முதலில் இதற்கு புறநானூறு என்ற டைட்டில் வைக்கப்பட்டது. சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட, சிவகார்த்திகேயன் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.
இதில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலிலா நடிக்கிறார். அவர் இந்த திரைப்படத்தில் தெலுங்கு பெண்ணாகவே வருவது அந்த திரைப்படத்தின் அறிமுக டீசரில் தெரியவந்துள்ளது. அதில் ஒரே காட்சியில் இடம்பெற்று இருந்தாலும், தெலுங்கு மொழியில் பேசி இருப்பார் ஸ்ரீ லீலா. இதேபோல் அதர்வாவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அனேகமாக அவர் சிவகார்த்திகேயனின் நண்பனாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கல்லூரியிலேயே இந்த திரைப்படம் நடைபெறுவது போன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆரம்பத்தில் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் இருக்கும் வளாகத்தை பயன்படுத்தி இருந்தார்கள். படமும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது.
இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆம் காலகட்டங்களில் எழுந்த போராட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை சுதா இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் நூறாவது திரைப்படமாக இது அமைந்துள்ளது. இதற்காக தனது சிறப்பான இசையை கொடுத்துக் கொண்டிருக்கும் ஜீவி, அதன் அறிமுக டீசரிலேயே படத்தின் இசை எப்படி இருக்கும் என்பதை காட்டி இருந்தார்.
ஒரு சிலர் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு தான் படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. பராசக்தி திரைப்படத்தில் பல ஆச்சரியம் இருந்தாலும் நம்மை பெரிதும் கவர்ந்திருப்பது ரவி மோகன் வில்லனாக நடிப்பது தான்.
இதுகுறித்து பேசி இருக்கும் அவர், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். சென்னை சிதம்பரம் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட சூட்டிங் இலங்கையில் நடைபெற இருக்கிறது. அனேகமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பராசக்தி திரைப்படம் வெளியாகும் என்று பேசுகிறார்கள்.





