விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படம் வரும் வியாழன் கிழமை வெளியாகிறது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் முடிந்து விட்டன.
வெள்ளி சனி கிழமைகளுக்கான டிக்கெட்டுகளும் நிரம்பி வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதே, இதன் விறுவிறுப்பான முன்பதிவுக்கு ஒரு காரணம்.
நடிகர் விஜய்யும் அடுத்த திரைப்படத்துடன் திரைத்துறையை விட்டு விலகி விடுவதாக அறிவித்திருப்பதால், பலரும் அவரது படத்தின் முதல் நாளில் காண முண்டியடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க படக்குழுவினர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும் போது அது தொடர்பான நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக பிரேம்ஜி அமரன் மற்றும் வைபவ் என இருவரும் படம் குறித்த புதுப்புது விஷயங்களை சொல்லி வருகின்றனர். இதில் சினேகாவின் தம்பியாக தான் நடிப்பதாகவும், மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய் எனக்கு மருமகன் என்றும் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் பிரேம்ஜி அமரன்.
படத்தில் விஜய் வரும் கார் நம்பரில் cm என்று எழுதி இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதுபோக அரவிந்த் ஆகாஷ், படத்தின் இறுதிக் காட்சியில் சிஎஸ்கே மேட்ச் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி பலரும் படத்தைப் பற்றிய முக்கிய சுவாரஸ்யங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவும் தன் பங்கிற்கு உளறிக் கொட்டியுள்ளார். ஏற்கனவே கோட் திரைப்படத்தில் வில்லனாக மோகன் நடித்திருப்பது நமக்கு தெரியும். இந்த நிலையில் படத்தில் வேறு ஒரு வில்லன் இருப்பதாகவும், அதைத்தான் இப்போது சொல்லப்போவது இல்லை என்றும் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். ட்ரைலரில் அந்த வில்லன் காட்டப்பட்டு இருக்கிறாரா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை.





