தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவருக்கு, திரைப்பட வாய்ப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக வர ஆரம்பித்தன. இதில், லிப்ட் திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகனாக அறிமுகமானார். ஹாரர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.
இருப்பினும் கவின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது தான் டாடா. கணேஷ் கே பாபு இயக்கிய இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. காதலை வேறொரு பாணியில் கூறிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய கவின் பலராலும் பாராட்டைப் பெற்றார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆனால் அவருக்கு 2024-ம் ஆண்டு பெரிய முன்னேற்றத்தை எதுவும் கொடுக்கவில்லை.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவரது நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ட்ரெய்லர் மட்டும் நன்றாக இருந்ததாகவும் ஆனால் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்றும் பலர் கூறினர். இதன் பிறகு வெளியான பிளடி பக்கர் திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.
இப்படி அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால், வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கவின். இப்படியான சூழலில் தான் அவரது இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் முதல் திரைப்படத்தின் பெயர் கிஸ். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இரண்டாவது திரைப்படம் மாஸ்க். இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. விகர்ணன் அசோக் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இருக்கும் சூழலில், படத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அவை அமைந்துள்ளன.





