கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். சிவாண்ணா என்றுதான் ரசிகர்கள் அவரை அன்போடு அழைக்கின்றனர். கன்னடத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் சில காட்சிகள் நடித்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி சரவணன் மலையாள நடிகர் விநாயகம் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக தமன்னாவின் காவலய்யா பாடல் செம டிரண்டிங் ஆனது.
மீண்டும் இப்போது ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஏனென்றால் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது அவரது இசைதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி செராப் போன்றவர்களும் அந்த படத்தில் கேமியோ ரோல் செய்திருந்தனர்.
ஜெயிலர் படத்தில் நடித்த முக்கிய கேரக்டர்களை மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைக்கவும் அவர்களது கேரக்டர்களை மேலும் அதிகப்படுத்தி படத்தில் அதிக முக்கியத்துவம் தரவும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முடிவு செய்திருக்கிறார். அதனால் சிவராஜ்குமார் கேரக்டர் ஜெயிலர் 2 படத்தில் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் போகிறது.
ஆனால் சில மாதங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகர் சிவராஜ்குமார் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்த நிலையில் முற்றிலும் குணமடைந்த அவர், பெங்களூருவுக்கு திரும்பி வந்து விட்டார். இப்போது டாக்டர்கள் அறிவுரைப்படி முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
அதனால் ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிப்பாரா, மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு நீடித்த நிலையில், ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி விட்டது. 15 நாட்கள் கால்ஷீட் தந்துள்ள அவர், மே மாதத்துக்குள் தனது காட்சிகளை எடுத்து முடிக்குமாறும் அதன்பிறகு ஒப்புக்கொண்ட கன்னட படங்களில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் நெல்சனிடம் கூறியிருக்கிறார். அதனால் ரஜினியுடன் மற்ற நடிகர்களுடன் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களுக்குள் நடத்தி முடிக்க இயக்குனர் நெல்சன் திட்டமிட்டு வருகிறார்.





