டிக்டாக் செயலி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து. இவர் பேசுகிற அந்த தென்மாவட்ட மொழி வட்டார பேச்சில் பலரும் மனதை பறிகொடுத்தனர். அதனால் மிக எளிதாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். பேப்பர் ஐடி பேப்பர் ஐடி என இவர் சிலரை திட்டுவது காமெடியாக இருப்பதால் பலரும் ரசித்து பார்த்து, இவரை பிரபலப்படுத்தி விட்டனர்.
கடந்தாண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனே இவரது நகைச்சுவையை விரும்பியதை பல இடங்களில் சுட்டிக்காட்டினார். முதல் நாள் முதல் நபராக வீட்டுக்குள் சென்றவரை, நீங்கள் மட்டுமே இன்று இரவு முழுவதும் தனியா வீட்டுக்குள் தங்க வேண்டும் அதுதான் டாஸ்க் என்று பயமுறுத்தி, ஜிபி முத்துவை டென்சன் செய்தார்.
ஆனால் இரண்டு வாரங்களிலேயே என் பிள்ளைகளை பார்க்காமல் என்னால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியவில்லை என, தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜிபிமுத்து. அது கமல்ஹாசன் உள்ளிட்ட பார்வையாளர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.
இதற்கிடையே சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிக்கொண்ட வீடியோவை ஜிபி முத்து பகிர்ந்திருக்கிார். அது வைரலானது. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களில் சிலருக்கு, அரிசி பருப்பு காய்கறிகளை ஜிபி முத்து வாங்கிக்கொடுத்து உதவியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய ஜிபி முத்து, அங்கு தேம்பி தேம்பி அழுதார். பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அவரது உடலுக்கு நேரில் வந்து என்னால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன். இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்.
ஒருமுறை விஜயகாந்தை நேரில் பார்க்க ஆசைப்பட்டு, வாடகை கார் எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றேன். அவரது வீட்டு வாசல் வரை சென்றும், அன்று அவரை பார்க்க முடியவில்லை. அவரது மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். என் அம்மா இழப்புக்கு பிறகு, நான் மிகவும் வருந்தியது கேப்டன் அய்யா இழப்புக்குதான். நான் சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டப்பட்டவன் என்பதால், அவர் செய்த தான தர்மம், சாப்பாடு போட்டதால் அவரை எனக்கு பிடிக்கும், என்று கூறியிருக்கிறார் ஜிபி முத்து.





