தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன் என்றால், உலக நாயகன் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பை பொருத்த வரை சிவாஜியா, கமலா என்ற பட்டிமன்ற கேள்விக்கு யாராலும் சரியான பதிலை சொல்ல முடியாது. நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளராக தான் இருக்கின்றனர்.
ஆனால் நடிகர் சிவாஜி இடத்தை நான் பிடிக்கவில்லை. அவரது இடத்தை நான் மட்டுமல்ல, யாருமே பிடிக்க முடியாது. சிவாஜி கணேசன் இடத்தை சிவாஜி கணேசன் மட்டுமே பிடிக்க முடியும் என்று சிவாஜி மறைவுக்கு பின் பேசிய ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வெளிப்படையாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், நடிகர் திலகம் சிவாஜியுடன் தனது நட்பு குறித்து கூறியதாவது, எனக்கு காலையில் ஏதாவது முக்கிய வேலைகள் இருந்தால் எனது மகள்கள் ஸ்ருதி அக்ஷரா இருவரையும் போக் ரோட்டில் உள்ள சிவாஜி அவர்கள் வீட்டில் விட்டுச் செல்வேன். அங்குள்ள குழந்தைகளுடன் அவர்கள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
கொல்லையில் குழந்தைகள் விளையாடுவதை நடிகர் திலகம் ஒரு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பார். அவரிடம் ஓடி ஆடி விளையாடி அவரை தொந்தரவு செய்யக் கூடாது. ரொம்ப மரியாதையா நடந்துக்கணும் என்று என் மகள்களிடம் சொல்லிட்டுதான் வந்திருப்பேன். ஆனால் ஒரு நாள் அப்படி நான் வீட்டுக்கு போகும் போது, சிவாஜி என்னை கையெடுத்து கும்பிட்டார்.
அண்ணே என்றேன். உன் பொண்ணு மகா கெட்டிக்காரிடா என்றார். நான் சிரித்தேன். நான் உன் பொண்ணை வம்புக்கு இழுக்கலாமே என்று கூப்பிட்டு கேட்டேன். யாருடி இந்தியாவிலேயே சிறந்த நடிகன் அப்படீன்னு கேட்டேன். அவ தரையில் காலில் கிண்டிக்கிட்டே இருந்தாள். நான் சொல்லட்டுமா, நான்தான். உங்கப்பன் கிட்ட கேளு அவன் சொல்வான் அப்படீன்னு சொன்னேன்.
கொஞ்ச நேரம் பல்லை பல்லை கடிச்சுக்கிட்டு நின்ன அவ, எங்கப்பா அந்த மரத்துல ஏறுவாரு, எங்கே நீங்க ஏறிக் காட்டுங்க, பார்ப்போம் என்று அவரிடம் கேட்டு எனக்காக சண்டை போட்டவள் என் மகள். அடேங்கப்பா, உடனே நான் ஒத்துக்கிட்டு தோத்துட்டேன். அதெல்லாம் என்னால பண்ண முடியாதும்மா, உங்கப்பன்தான் பண்ணுவான் என்று சிவாஜி அவர்கள் என் மகளிடம் சொன்னதாக என்னிடம் சொன்னார் என்று கமல்ஹாசன் அந்த சம்பவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.





