விஷாலுக்கு நடப்பாண்டு தொடக்கத்தில் மதகஜராஜா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக வேண்டியது. சுந்தர் சி இதனை இயக்கியிருந்தார். படத்தின் இரண்டாவது ஹீரோ சந்தானம் என சொல்லும் அளவுக்கு அவரது காமெடிகள் இடம் பெற்றிருந்தன.
ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கியது. இப்படியான சூழலில், கடந்த பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டிய விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப் போனதால், சிறு பட்ஜெட் திரைப்படங்கள் அவசர அவசரமாக களத்தில் குதித்தன. இதில் மதகஜராஜாவும் இடம்பெற்றது.
அனைத்து பொருளாதார தடைகளையும் தூக்கி எறிந்து விட்டு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. சந்தானத்தின் காமெடிகளை ரசிகர்கள் ரசித்ததால், மதகஜராஜா பேசப்பட்டது. பலரும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு வந்து குவிய ஆரம்பித்தனர்.
மிக மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. இதற்குப் பிறகு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகவே இல்லை. அவர் கௌதம் மேனன் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபட்டது. இதனை விஷாலே ஒருமுறை பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதனால் நிச்சயம் விஷாலுக்கு அடுத்த திரைப்படம் அவருடன் தான் இருக்கும் என்று பலரும் பேசி வந்த சூழலில் தற்போது இயக்குனர் மாறி இருக்கிறார். அதன்படி, ரவி அரசு இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் அதர்வாவை வைத்து ஈட்டி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆக்சன் பாணியில் இந்த திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்து ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் ஜிவி பிரகாஷை வைத்து ஐங்கரன் என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். இது விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வெற்றி பெறவில்லை. இப்படியான சூழலில்தான் விஷாலின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ரவியரசு. படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





