தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் கூறிவரும் நடிகர் விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டு முதலமைச்சராக அமர்வதே தனது லட்சியம் என்ற இலக்குடன் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை கைது செய்தது குறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தவெக தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாள போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்தி கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டு பெண்கள் இருப்பதால்தான், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது.
ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காக கூட போராட்டத்தை நடத்தக்கூடாது என்ற அராஜக போக்குடன் தமிழக அரசு கழக மகளிர் மற்றும் தோழர்களை கைது செய்திருக்கிறது.இதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன் என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





