சமீபகாலமாகவே நடிகர் ஜெயம் ரவி ஒரு பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் அது ஜெயம் ரவியின் குறிப்பிட்ட தக்க படங்களில் ஒன்றான வெற்றி என்று கூற முடியாது.
இப்படி இருக்க அவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான அகிலன் என்ற திரைப்படம், ரிலீஸ் ஆனது கூட இங்கு பல பேருக்கு தெரியாது. அந்த அளவுக்கு அந்த திரைப்படம் மிக மோசமான விமர்சனத்தை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து இறைவன் என்னும் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்தார். நயன்தாரா கதாநாயகியாக வந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதால் அதனை பலரும் எதிர்பார்த்தனர். உதயநிதி நடித்த மனிதன் திரைப்படத்தை எடுத்தவர் தான் இதனை இயக்கி இருந்தார்.
ஆனால் வலுவான திரைக்கதை அமையாததன் காரணமாக இந்த திரைப்படம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி சைரன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படியான சூழலில் வெற்றிக்காக போராடிவரும் ஜெயம் ரவி தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜீனி என்னும் ஃபேண்டஸி திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதேபோல், சிவா மனசுல சக்தி ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படங்களில் இயக்குனர் ராஜேஷ் உடன் இணைந்து அவர் பிரதர் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. பீட்சா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் உடன் தான் ஜெயம் ரவி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜே தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம். கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யாவை வைத்து படம் எடுத்து வருகிறார். இதன்பிறகு அவர் ஜெயம் ரவியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





