பல வருடங்களாகவே விஜய்யின் அரசியல் நுழைவு குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதன் முதல் படியாக விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். மேலும் தனது ரசிகர்களின் மூலம் பல சமூக சேவைகளையும் செய்யத்தொடங்கினார்.

அதே போல் விஜய், தான் நடிக்கும் திரைப்படங்களில் அவ்வப்போது அரசியல் சம்பந்தமாக கருத்துக்களையும் கூறுவது வழக்கமாக ஆனது. இதனால் விஜய்க்கு சில குறிப்பிட்ட கட்சியினரிடையே பல எதிர்ப்புகளும் கிளம்பியது.
சமீப காலமாக விஜய், தனது பனையூர் அலுவலகத்தில் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்புகள் எல்லாம் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்தான சந்திப்புகள் என கூறப்படுகிறது. மேலும் திராவிட இயக்கத்தை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை தனது வீட்டிற்கே அழைத்து அவருடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பல விஷயங்களை விஜய் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.

அதே போல் இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 தேர்ச்சி பெற்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவியான நந்தினியை, விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் எல்லாம் விஜய் தனது அரசியல் நுழைவுக்காக நகர்த்தும் காய்கள் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த வருடம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவியர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கவுள்ளார் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது.
இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. அதாவது தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் இது குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதாவது வருகிற 17 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் சென்டரில் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த “பத்து மற்றும் பன்னிரண்டாம்” வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவிகளுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





