மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ் சுகுமாறன். இயக்குனராகவும் வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். அவரது ஆடுஜீவிதம் படம் பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் மொழி இராவணன் சத்தம் போடாதே கண்ணாமூச்சி ஏனடா கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.
போர்த்தொழில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் விக்னேஷ் ராஜா. நடிகர்கள் சரத்குமார் அசோக் செல்வன் இணைந்து நடித்த இந்த படம் மிகப்பெரிய திரில்லர் ஆக்சன் படமாக இருந்து பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த கர படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். கர படத்தில் நடிகர் தனுஷூடன் மமிதா பைஜூ சுராஜ் வெஞ்சரமூடு ஜெயராம் கேஎஸ் ரவிக்குமார் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
வரும் 30ம் தேதி கர படம் தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான பிரமோஷனில் இயக்குனர் விக்னேஷ் ராஜா பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் விக்னேஷ் ராஜா கர படம் குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்க மறுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து விக்னேஷ் ராஜா கூறியதாவது, போர்த்தொழில் படத்தை பார்த்துவிட்டு நடிகர் பிருத்விராஜ் என்னை தொடர்பு கொண்டு பேசினார். கர படத்தில் முதல் நடிக்க இருந்தவர் அவர்தான், அவரிடம் இந்த கதையை கூறியபோது அந்த கதாபாத்திரம் மிகவும் இரட்டைத்தன்மை கொண்டதாக இருப்பதால் தனக்கு பிடிக்கவில்லை என்றார். ஆனாலும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
நான் இன்னும் சிலரிடம் இந்த கதையை சொல்லும்போதும் மற்றவர்களும் இதையே தான் கூறினார்கள். பிறகு அந்த கேரக்டரில் சில மாற்றங்கள் செய்து பிறகுதான் சுராஜ் வெஞ்சரமூடு இந்த படத்தில் இணைந்தார் என்று அவர் கூறியிருக்கிறார். மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும் கவனத்தையும் பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியான பள்ளிச்சட்டம்பி என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் பிருத்விராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





