நேற்று தமிழக சட்டசபை சபையில் தமிழ்நாடு அரசின் 2025 – 26ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், திமுக அரசின் பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் 2025 – 26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், ரூ. 10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
ஆனால், அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம் இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே. புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரி கல்வியின் தரத்தை நிலை நிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?
அடிப்படையான சாலை வசதிகளை கவனிக்காமல் அன்புச்சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்? கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல, பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்று அறிவிப்பு இல்லையே ஏன்?
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா, இல்லை வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா என்பது போக போகத்தான் தெரியும். அண்ணா பல்கலை தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பு எல்லாம் இருக்கட்டும், முதலில் அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பு உறுதி செய்யுங்கள்.
மக்கள் பாதிக்காத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை. மாறாக மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவு படுத்தப்படும் என்ற அறிவிப்பு பரந்தூர் பகுதி விவசாய பெருங்குடி மக்களுக்கு செய்யப்படும் துரோகமாகவே இருக்கும் என்றும் அதில் தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.





