தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கிங்காங். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 300க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளிலும் நடிகர் கிங்காங் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தே போனில் அழைத்து பேசும் அளவுக்கு சிறந்த கலைஞராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் கிங்காங் மகள் திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்க வருமாறு பல முன்னணி நடிகர் நடிகைகளை நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வந்து நடிகர் கிங்காங் அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் பிரமுகர்களுக்கும் நேரில் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் கிங்காங் இல்ல திருமண விழாவுக்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வருகை தந்தார். அதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் நேரில் வந்து வாழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் இந்த திருமண விழாவுக்கு வராததது இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையானது. சக கலைஞனை மதிக்க தெரியாத நடிகர்களாக உள்ளனர். வசதியான பெரிய விஐபிகள் திருமண விழா என்றால் அங்கே குவிந்து விடுவார்கள் என்று பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மன்சூர் அலிகான் பாண்டியராஜன் போன்ற சில நடிகர்கள், நடிகர் கிங்காங் வீட்டுக்கே நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவுக்கு வராத சூழலில் அவர்கள் இருந்ததால் வீட்டுக்கே நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாய் மொய் பணம் அனுப்பியதாக நடிகர் கிங்காங் தெரிவித்திருந்தார்.
இப்போது நடிகர் விஜய் சேதுபதி, தனது அலுவலகத்துக்கு நடிகர் கிங்காங் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதிதாக திருமணம் செய்த மணக்களை நேரில் வரவழைத்து வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அவர்களுடன் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்ட நிலையில் அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.





