அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக வெளியான டிராகன் திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. பல தரப்பினரையும் இந்த திரைப்படம் கவர்ந்திருப்பதால், திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் இன்னும் கூட்டம் குறைந்த பாடில்லை. நல்ல கதைக்கு மக்கள் எப்போதும் ஆதரவளிப்பாளர்கள் என்பதை இந்தத் திரைப்படம் சுட்டி காட்டுகிறது என்றே கூறலாம்.
குறிப்பாக படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதன், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக உள்வாங்கி அதை அப்படியே பிரதிபலித்ததால் ரசிகர்களால் பாராட்டப்பட்டார். இதே போல் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். வெறும் பத்து நாட்களில் 100 கோடி ரூபாய் இந்த திரைப்படம் வசூல் குவித்தது.
எப்படியும் இது 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் என்று கூறி வருகிறார்கள். இது மட்டுமல்ல, ஹிந்தி திரையுலகிலும் இந்த திரைப்படம் டப்பிங் செய்யப்படுகிறது. அங்கு ரிட்டன் ஆப் தி டிராகன் என்னும் பெயரில் படத்தை வெளியிடுகிறார்கள். மார்ச் 18 ஆம் தேதி படம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்புவுடன் இணைகிறார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. இது சிலம்பரசனின் 51 வது திரைப்படமாக உருவாகிறது. வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் தொடங்கும் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. கதையை தற்போது எழுதி முடித்து இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
தான் எங்கு சென்றாலும் சிம்பு ரசிகர் என்பதை அஸ்வந்த் மாரிமுத்து அழுத்தமாக பதிவு செய்து வருகிறார். டிராகன் திரைப்படத்தில் ஒரு பாடலையும் சிலம்பரசன் பாடியிருந்தார். இந்த நிலையில், டிராகன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்த நிகழ்வை இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து பகிர்ந்துள்ளார். அதில், அடுத்ததாக நீங்கள் என்ன படம் இயக்கப் போகிறீர்கள் என்று ரஜினிகாந்த் என்னிடம் கேட்டார். நான் சிலம்பரசன் உடன் இணைய இருப்பதாக தெரிவித்தேன். தற்போது அவர் நிறைய படங்கள் செய்வதில்லையே. ஆனால் அவருக்கு இன்னும் முன்பு இருந்தது போலவே ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று என்னிடம் கூறினார். சிம்பு குறித்து ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அஸ்வந்த் மாரிமுத்து பகிர்ந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து சிலாகித்து வருகின்றனர்.





