நடிகர் விஜய், திடீரென தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயராக அறிவித்துள்ள அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவு தரவோ இல்லை. ஆனால் 2026 சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என்று முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தி விட்டார்.
இதையடுத்து திமுக, அதிமுக கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அரசியல் களத்தில் திமுகவின் எதிரி அதிமுகதான். அதிமுகவின் எதிரி திமுகதான். அவர்களுக்குள்தான் பகிரங்க மோதல் நடக்கும். பாஜக வை பொருத்த வரை பெரிய அளவில் குறுக்கீடு இருக்காது என்பதுதான் அவர்களது எண்ணமாக இருந்தது.
மேலும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள், உதிரி கட்சிகள், சுயேட்சை தரப்பில் ஓட்டுகளை சொற்ப அளவில் பிரித்தாலும், ஓட்டுகளின் பதிவு சதவீதம் கணிசமாக குறையும் போது வெகு எளிதாக திமுக, அதிமுக என இரண்டில் ஏதேனும் ஒன்று வெற்றிவாகை சூடிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இப்போது விஜய் அறிவித்துள்ள அரசியல் அறிவிப்பை சிலர் கிண்டல் செய்தாலும், நிச்சயமாக தமிழக சட்டசபை தேர்தலில், விஜயின் வரவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள் கிண்டலாக நினைப்பது போல விஜய் சொற்ப ஓட்டுகளோ, சில லட்சம் ஓட்டுகளோ வாங்கி பின்வாங்கப் போவது இல்லை. விஜயகாந்த் அளவுக்கு விஜய் வரவும் அரசியலில் மாஸ் காட்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
விஜயை தொடர்ந்து அடுத்து, அரசியல் களத்தில் குதிக்க நடிகர் விஷால் தயாராகி வருகிறார். கட்சி பெயர், கட்சி கொடி போன்றவை எல்லாம் தயார் செய்துள்ள நிலையில், மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளையும் நியமிக்க துவங்கி விட்டார் என்று தகவல் பரவி வருகிறது. விஷால் நற்பணி இயக்கத்தை, கட்சி அமைப்பாக மாற்ற விரைவில் ஏற்பாடு நடக்கிறது. விரைவில் அதிகாரபூர்வமாக விஷால் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 2017ல் போட்டியிட, விஷால் வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, முதலிலேயே அரசியல் ஆர்வத்தில் இருக்கும் விஷால், வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அவரும் விஜயை போல, களத்தில் இறங்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் அவரது படங்களே ஓடாத நிலையில், யாரை நம்பி அவர் அரசியல் கட்சி துவங்குகிறார், யார் அவருக்கு ஓட்டு வங்கி என்றுதான் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.





