கடந்தாண்டின் துவக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் லால் சலாம் வெளியானது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்த நிலையில் விக்ராந்த் விஷ்ணு விஷால் முதன்மை கேரக்டர்களில் நடித்திருந்தனர். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு, ஏஆர் ரகுமான் இசை என இருந்தும் இந்த படம் தோல்வியடைந்தது.
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படம் வேட்டையன் படத்தில் நடித்தார். லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்தார். தசெ ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மஞ்சுவாரியார் துஷாரா விஜயன் அபிராமி பகத் பாசில் ரக்சன் ராணா டகுபதி ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ரூ. 235 கோடி வரை வசூலித்து கடந்தாண்டில் வெளியான படங்களில், அதிக வசூல் செய்த படங்களில் 3வது இடம் வேட்டையன் படத்துக்கு கிடைத்தது. இந்த படத்தில் கல்வி மாபியா என்கவுண்டர் ஆகியவை முக்கிய சப்ஜெக்ட்களாக பேசப்பட்டன. ஆனால் படம் ரஜினி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே தந்தது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடித்த லியோ படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுமையடைய உள்ளது. அதன் பிறகு போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்க உள்ளன.
சமீபகாலமாக ஓடிடி நிறுவனங்கள் டிஜிட்டல் ரைட்ஸ் விலையை வெகுவாக குறைத்திருக்கின்றன. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கூட படம் ரிலீஸாகி பார்த்த பிறகுதான் விலை பேச சம்மதிக்கின்றன. பிஸினஸ் கட் எனப்படும் 40 நிமிட வீடியோ பார்த்தும் பல படங்களின் விலை தீர்மானிக்கப்படுகின்றன.
ஆனால் பெரும்பாலான படங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் மிக குறைவான விலையே தீர்மானிக்கின்றன. அதனால் பல படங்கள் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் விலை போகாமல் ரிலீஸ் ஆகாமல் தாமதம் நீடிக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவான கூலி படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளது. இது படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை குஷிப்படுத்தி உள்ளது.





