மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் மீண்டும் எகிறி இருக்கிறது. அது அவருக்கு ஐம்பதாவது திரைப்படமாக உருவானது. தமிழ் திரையுலகை தாண்டி இந்திய திரையுலகம் வரை பேசப்பட்ட அந்த திரைப்படம் சீனாவிலும் சக்கை போடு போட்டது தான் இங்கு ஆச்சரியம். டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படம், அங்குள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது அவர் ஏஸ் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ருக்மணி வசந்த்.
அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. மிஷ்கின் உடனான திரைப்படமும் விஜய் சேதுபதியின் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில், கேமியோ ரோலில் வந்து போகிறார் விஜய் சேதுபதி. ஆண்ட்ரியா மெயின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆனால் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவே இல்லை. இதுபோக கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்க்கும்போது அனைவரும் இருக்கையின் நுனிக்கே வந்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்து இருக்கிறார். கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சரியாக போகவில்லை. இப்படியான சூழலில் தான் தனது அடுத்த திரைப்படத்திற்காக அவர் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து தற்போது அதற்கான பணிகளை நிறைவு செய்து இருக்கிறார்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பது நித்யா மேனன். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வீரா என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் தலைப்பை ஆகாச வீரன் என வைக்கலாம் என்று பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளாராம். அது மட்டுமல்லாமல் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை 22 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாம். இதனால் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





