தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரோஜா. செம்பருத்தி படத்தில் நாயகியாக அறிமுகமான அவர் தொடர்ந்து ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் பிரபு கார்த்திக் பிரபுதேவா என பல முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார்.
ஒரு கட்டத்தில் இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்த அவர் ஆந்திராவில் செட்டிலாகி விட்டார். பிறகு ஆந்திரா அரசியலில் ஈடுபட்ட அவர் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது எம்எல்ஏ மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானார். தமிழ்நாட்டில் தான் முன்னணி நாயகியாக வலம் வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் குதிக்காமல் ஏன் ஆந்திராவுக்கு சென்றார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. மேலும் இப்போதும் தமிழ்நாட்டில் அவர் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு வரலாமே என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நான் ஆந்திராவுக்கு வேண்டும் என்றே செல்லவில்லை. என் அப்பாவின் நண்பருக்காக தான் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போனேன். தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மா இருக்கும்போது என்னை கூப்பிட்டார்கள்.
அப்போது தான் குஷ்பூ அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்றார். அப்போது ஜெயலலிதா என்னை தமிழ்நாடு அரசியலுக்கு வருகிறீர்களா என்று கேட்டார். அப்போது என் கணவர் செல்வமணி சொன்னார். அங்கே இங்கே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டாம். ஆந்திராவில் கடினமாக உழைத்து அரசியலில் ஜெயித்துக் காட்டு.
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தால் அங்கு தோற்றுவிட்டு இங்கு வந்து விட்டாய் என்று சொல்வார்கள். அதனால் ஆந்திராவில் ஜெயிச்சுட்டு தமிழ்நாட்டுக்கு வா என்று என் கணவர் தான் எனக்கு அறிவுறுத்தினார் என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





