கடந்த 10 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா குறித்த விமர்சனங்கள் சினிமா பத்திரிகைளில் வார பத்திரிகைகளில் நாளிதழ்களில் வெளியாகும். அது வெளியாக எப்படியும் ஒரு வாரம் வரை தாமதமாகும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் படங்களை பார்த்தும் விடுவார்கள்.
அதனால் படம் பார்க்கும் ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்களே மற்றவர்களை தியேட்டர்களை நோக்கி செல்ல வைக்கும். அந்த காலகட்டத்தில் படம் பார்த்தவர்களே மற்றவர்களிடம் படத்தை கதையாக சொல்லும் வழக்கமும் இருந்தது. அதனால் கதை கேட்ட பலரும் அந்த படங்களை பார்க்க ஆர்வம் காட்டினர்.
ஆனால் இப்போதெல்லாம் ஆண்ட்ராய்டு யுகத்தில் படம் பார்க்க பார்க்கவே பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் எக்ஸ் பக்கத்திலும் படம் குறித்த விமர்சனங்களை ஒரே வார்த்தையில் போட்டு அந்த படத்தையே துவம்சம் செய்து விடுகின்றனர். மொக்க பூமர் ஸிரிஞ் என்ற ஒரே வார்த்தையில் மொத்த படத்தையும் கழுவி ஊற்றி விடுகின்றனர்.
அத்துடன் சினிமா விமர்சகர்களாக யூடியூப்களில் வலம் வரும் சிலரும், அந்த படம் குறித்து அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேய்ந்து விடுகின்றனர். முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வருவோர் படம் குறித்து சொல்லும் விமர்சனங்களும் இணையத்தில் வைரலாகி அந்த படத்துக்கு மொத்தமாக மூடுவிழா செய்துவிடுவதும் வழக்கமாக நடக்கிறது.
அதிலும் ப்ளு சட்டை மாறன் போன்ற சினிமா விமர்சகர்களின் விமர்சனங்கள் பெரிய அளவில் படங்களை பாதிக்கின்றன. அதனால் தமிழ் சினிமா சார்ந்த நடிகர்கள் சிலர் நேரடியாகவே ப்ளு சட்டை மாறன் குறித்து எதிர்விமர்சனங்கள் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு படத்தை சரியில்லை என்று விமர்சித்தால் அதற்கு எதிராக நடிகர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் சினிமா ரிவ்யூ எல்லாமே பார்ப்பேன். அதுல ஒரு 10 பேரு ரொம்ப நேர்மையா பண்றாங்க. எனக்கு ப்ளூ சட்டை மாறனுடைய ரிவ்யூவும் ரொம்ப பிடிக்கும். அவர் டைரக்டர் யூனியன்ல ஒரு உறுப்பினர். நான் டைரக்டர்ஸ் யூனியன் தலைவராக இருந்த போது, எல்லாரும் அவர் மேல நடவடிக்கை எடுக்கணும், அவரை தடை செய்ய வேண்டும் என்று என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணினாங்க. விமர்சிப்பது ஒருத்தருடைய உரிமை. அதை நாம் தடுக்கவே முடியாது. அவர் விமர்சிப்பது தப்பில்லை என்று சொல்லிட்டேன். அவர் ரொம்ப நேர்மையா பண்ணுகிறார் என்று இயக்குனர் விக்ரமன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





