நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாநகரம், கைதி, விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தை எடுத்துள்ளார். மாஸ்டருக்கு பிறகு அவர் இரண்டாவது முறையாக விஜய் உடன் சேர்ந்து இருக்கிறார். இதில் திரிஷா, அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அனிருத் இசையில் லியோ படத்திலிருந்து நா ரெடி தான் பாடல் வெளியாகி ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த அப்டேட்டை விட்ட லியோ படக் குழு, அவர் ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தது. வரும் 15ம் தேதி, அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு அப்டேட் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் அடுத்த திரைப்படமான தளபதி 68-ஐ யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது. இதில், கார்த்திக் சுப்புராஜ், அட்லி ஆகியோரது பெயர்கள் அடிபட, யாரும் எதிர்பாராத நேரத்தில் அறிவிக்கப்பட்டார் வெங்கட் பிரபு.

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தது. மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. புதிய கீதை திரைப்படத்திற்குப் பிறகு, விஜய்யும் – யுவன் சங்கர் ராஜாவும் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்தப் படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும், விஜய்யின் சகோதரராக ஜெய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 68 படத்தைக் குறித்து பேசியுள்ள வெங்கட் பிரபு, இது நிச்சயம் அரசியல் படம் இல்லை என்றும், முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் படமாகதான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தளபதி 68 உறுதியாகி அறிவிப்பு வெளியான பிறகு, தனக்கு முதன் முதலில் செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது அஜித்குமார்தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தான் திட்டமிட்டு இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் படத்தில் இணைந்ததற்கு அஜித் வாழ்த்து கூறி இருப்பது, ஏகே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.





