தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஒன்பதுல குரு ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சந்தானம் தனது படங்களில் அதிகளவில் பவர் ஸ்டார் சீனிவாசனை கலாய்த்து தள்ளி ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
நடிகர் விஜய் குறித்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அடிக்கடி விமர்சித்து பேசி வருகிறார். விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று கூறியிருக்கிறார். விஜய் தனது அரசியல் மேடையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசி வருகிறார் என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது, நடிகர் விஜய் எல்லாம் சிஎம் ஆக வர முடியாது. அடிச்சு சொல்கிறேன். ரசிகர்களை எல்லாம் நம்பக் கூடாது. இனி வருகிற தேர்தலில் ஸ்டாலின்தான் முதல்வர். அவர்தான் மீண்டும் வருவார் என்பது உறுதி.
விஜய், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட வரலாம். ஆனால் எதிர்கட்சியாக தான் வருவார்கள். அதெல்லாம் 2வது இடம்தான். முதல்வராக அமரப் போவது ஸ்டாலின்தான். இது என் விருப்பம் இல்லை. மக்களின் தீர்ப்பு அதுதான். விஜய்க்கு 17 சதவீதம் ஓட்டு இருக்கிறது என்றால் அவர் எதிர்கட்சியாக வேண்டுமானால் வரலாம். ஆனால் சிஎம் ஆக வர முடியாது.
திமுகவுக்கு என்று ஓட்டு வங்கி இருக்கிறது. அவர்களது கோட்டை என நிறைய இருக்கிறது. அதனால் அதை எல்லாம் ஒரே தேர்தலில் மாற்றிவிட முடியாது. விஜய்க்கு ரசிகர்கள் ஓட்டுப் போடுவார்கள். ஆனால் ரசிகர்களை நம்பவும் கூடாது. சினிமாவில் நம்பலாம், தியேட்டர்களில் நம்பலாம் படத்தை 600 நாள் ஓட்டலாம், 1000 நாள் ஓட்டலாம். ஆனால் அரசியலில் ரசிகர்களை நம்ப முடியாது.
ஓட்டு வங்கி என்பது அந்தந்த கட்சிக்கு என மக்கள் இருக்கின்றனர். படித்தவர்கள், பெரிய அறிஞர்கள் அறிவாளிகள் எல்லாம் இருக்கின்றனர். அவர்களது ஓட்டுகளை எல்லாம் உடனே மாற்றி போட்டுவிட மாட்டார்கள். விஜய்க்கு அப்படி எல்லாம் ஓட்டு விழுந்து விடாது. ஆனால் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் ஓட்டுப் போடுவார்கள். அதை மறுக்கவில்லை. எதிர்கட்சியாக வேண்டுமானால் வர வாய்ப்புள்ளது என, பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியிருக்கிறார்.





