தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்தும் திமுக ஆதரவாளர் பிக் பாஸ் ஜூலி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சட்டசபை தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை முன்வைத்து பல வீடியோக்களை வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி இப்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த வீடியோவில் பிக்பாஸ் ஜூலி கூறியிருப்பதாவது, தவெக தான் இப்போது ஆட்சியில் இருக்கிறது. விஜய் அண்ணாதான் சிஎம். இது உங்களுக்கு நினைவு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கடந்த 10 15 நாட்களாகவே எங்கு பார்த்தாலும் மரண செய்திகள் தான் வருகிறது. இன்ஸ்டாகிராமில் எங்கு பார்த்தாலும் மரண ஓலமாகவே இருக்கிறது.
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் பீச்சுக்கு விளையாட சென்ற பெண் காணாமல் போய் கடைசியில் அந்த பெண் இறந்து விட்டார். திருச்சியில் ஒரு செவிலியருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த செவிலியர் உயிரிழந்துள்ளார். இதனால் செவிலியர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் விஜய் அண்ணா இதற்கெல்லாம் நீங்கள் உட்கார்ந்து டிவீட் போடுகிறீர்கள். டிவீட் போடுவதற்கா மக்கள் உங்களை ஆட்சியில் அமர வைத்தார்கள்? எங்களுக்கு டிவீட்டரில் டிவீட் போடவும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவும் தெரியாதா? களத்தில் வந்து இறங்கி அவர்களுக்கு ஆறுதல் கூற சொல்ல முடியாதா? உங்கள் ஆட்சியை இதெல்லாம் நடக்காது என்று நம்பித்தானே மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள்.
எங்கள் அண்ணன் ஆக்சன் ஹீரோ என்று நம்பித்தானே ஓட்டு போட்டார்கள். அவர்களுக்கு இப்படி கையை விரித்து காட்டுகிறீர்களே இது நியாயமா? உங்கள் அமைச்சர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இது அரசியல் என்று கூறுகிறார்கள். கோயம்புத்தூர் சிறுமிக்கு என்ன ஆனது என்று கேட்டால் இது அரசியல் என்று சொல்கிறார்கள். மற்றொரு அமைச்சருக்கு என்ன துறை கொடுத்தீர்கள் என்று கூட தெரியவில்லை.
பல இடங்களில் மின்சாரம் இல்லை. இப்படி மக்களை கஷ்டப்படுத்தவா அரசியலுக்கு வந்தீர்கள்? முதலமைச்சர் ஆனீர்கள்? ஓட்டு போடுங்கள். விஜய் அண்ணா சிஎம் ஆனால் அனைத்தையும் மாற்றி விடுவார் என்று இன்ஸ்டாகிராமில் சொன்னவர்கள் எல்லாம் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. மக்கள் கதறி அழுவது உங்கள் காதில் கேட்கவில்லையா? களத்தில் வந்து பேசுங்க அண்ணா என்று பிக்பாஸ் ஜூலி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





