தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த அவர் பல நேரங்களில் படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் பல நடிகர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். காதலன் படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் சியான் விக்ரம்தான்.
இயக்குனர் பாலா இயக்கிய சேது படம்தான் நடிகர் விக்ரம் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜன் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருந்தும் தயாரிப்பாளராக இருந்தும் தனது அக்கா மகன் விக்ரமுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்து உதவ மறுத்துவிட்டார்.
இதனால் பல ஆண்டுகளாக சொந்த தாய்மாமா மகன் பிரசாந்த், தனது அத்தை மகன் விக்ரம் என்ற நெருக்கமான உறவில் இருந்தும் நடிகர் பிரசாந்தும் நடிகர் விக்ரமும் அன்னிய நபர்கள் போலவே இருந்து வருகின்றனர். சமீபத்தில்தான் விக்ரமும் பிரசாந்தும் நெருங்கிய உறவினர்கள் என்ற விஷயமே ரசிகர்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் கடந்த வாரத்தில் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
வீரதீர சூரன் படம் ரிலீஸ்சை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பிரமோசன் நிகழ்ச்சிகளில் நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார் நடிகை துஷாரா விஜயன் நடிகர் எஸ்ஜே சூர்யா பங்கேற்று வந்தனர். படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசி படத்தை விளம்பரம் செய்தனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் தமிழ்நாடு முழுவதும் வீரதீர சூரன் படம் ரிலீஸான தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தும் படத்தை பிரமோட் செய்து வருகிறார்.
சமீபத்தில் தியேட்டருக்கு விசிட் செய்து ரசிகர்களை சந்தித்த நடிகர் விக்ரம் அவர்களது கேள்விகளுக்கு மேடையில் பதில் தந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களை போல வயசாகாமல் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் விக்ரம், சனிக்கிழமை தோறும் கழுதைப்பால் குடிக்க வேண்டும் என்று பதில் அளித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 59 வயதான ஒரு சீனியர் நடிகர் இப்படி ரசிகர்கள் மத்தியில் தரக்குறைவாக பேசலாமா, என கடும் சர்ச்சை எழுந்துள்ளது.





