கடந்தாண்டில் நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இப்போது அவரது நடிப்பில் வீரதீர சூரன் படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் இந்த படத்தில் சியான் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு காரணமாக, கடந்த 27ம் தேதி காலை மதியம் வீர தீர சூரன் படக்காட்சி வெளியாகாமல் மாலையில்தான் படம் திரைக்கு வந்தது. எனினும் 7 நாட்களில் ரூ. 37 கோடி ரூபாய் வரை வசூலித்து படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய கவனமும் வரவேற்பும் கிடைத்துள்ளது. நடிகர் விக்ரம் ஊர் ஊராக தியேட்டர்களுக்கு விசிட் செய்து ரசிகர்களை நேரில் சந்தித்தும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே வீர தீர சூரன் படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ஒரே ஒரு வாழ்க்கை வரலாறாக வாழ்ந்து… அப்படி என ஒருவன் எளிமையாக சொல்லிவிட்டு சென்று விட்டான். ஆனால் இந்த வாழ்க்கை இருக்கிறதே, ஏதாவது ஒரு பிரச்சனையை தூக்கி வீசுகிறது.
உதாரணமாக வீர தீர சூரன் படம் ரிலீஸூக்கு முன்பாக பயங்கரமாக பாராட்டி அனைவரையும் ஆர்வத்தில் ஆழ்த்தினர். அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சட்டப் பிரச்சனை. உயர்நீதிமன்றம் இந்த படத்தை 4 வாரங்களுக்கு தடை எனக் கூறியது. நானும் எனது இயக்குனரும் இதில் நடித்த அனைவரும் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம்.
எப்படியாவது படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம். என்னால் செய்ய முடிந்ததை செய்தேன். பேராதரவுக்கு நன்றி. எனது ரசிகர்களுக்காக மிகவும் எதார்த்தமான வித்தியாசமான கமர்சியல் படத்தை தர நினைத்துத்தான் இந்த படத்தில் நடித்தேன். முதல் இரண்டு காட்சிகள் இல்லாமல் வெளியானால் அந்தப் படம் அவ்வளவுதான் என்பது வழக்கமானது. ஆனால் படம் வெளியான பிறகு மக்களின் நல்ல ஆதரவு கிடைத்தது.
குறிப்பாக குடும்பத்தினரிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. உங்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். படம் பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என உறுதியாக கூறுகிறேன். நாங்கள் நினைத்தது நடந்தது. படம் பார்த்தவர்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பார்க்காதவர்கள் பார்ப்பீர்கள் என நம்புகிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் சீயான் விக்ரம் கூறியிருக்கிறார்.





