நடிகர் அஜீத்குமாரின் மனைவி ஷாலினி. தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக அவரது நடிப்பு, பலரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல படங்களில் மிக சிறப்பாக இருந்தது. மலையாள டைரக்டர் பாசில்தான், ஷாலினியை சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர்.
அதே போல் நடிகை ஷாலினியை, வளர்ந்த பெண்ணாக இளம் நடிகையாக அறிமுகப்படுத்தியவரும் இயக்குனர் பாசில்தான். காதலுக்கு மரியாதை என்ற படம் மூலம் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி அறிமுகமானார். அந்த படம் விஜய்க்கும், ஷாலினிக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக, திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் ஷாலினி நடித்தார். இதில் அமர்க்களம் படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்த போது, ஷாலினி மீது அஜீத்குமாருக்கு காதல் ஏற்பட்டது. ஷாலினியும் அஜீத்குமாரை விரும்பிய நிலையில், இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.
அஜீத்குமார் – ஷாலினி தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகரான அஜீத்குமார் மனைவியாக இருந்தாலும், ஷாலினி மிக இயல்பாக, சராசரி குடும்பத் தலைவியாக, இல்லத்தரசியாக தான் இதுவரை இருந்து வருகிறார். அவரே வெளியிடங்களுக்கு வந்து ஷாப்பிங் செய்கிறார். பொது இடங்களில் அண்ணி அண்ணி என அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தந்து வருகிறார்.
நடிகர் அஜீத்குமாருக்கு சமூக வலைதளங்களில் எந்த கணக்கும் இல்லை. பேஸ்புக், வாட்சப், டிவிட்டர் என எதுவுமே அவர் பயன்படுத்துவது இல்லை. ஏதேனும் முக்கிய அறிவிப்பை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால், தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம், அவரது சமூகவலைதள பக்கங்களில் வாயிலாக தான் அஜீத் சார்ந்த அறிவிப்புகள் இதுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆனால், ஷாலினி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி, அதை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அஜீத் மனைவி ஷாலினி பெயரில் மர்ம நபர்கள் போலியாக டிவிட்டர் கணக்கு துவங்கி, பயன்பாட்டில் உள்ளது தெரிய வந்திருக்கிறது. அதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷாலினி, அந்த டிவிட்டர் கணக்கு என்னுடையது அல்ல. அந்த அக்கவுண்டை யாரும் நம்பாதீர்கள். தயவு செய்து அதை பின்தொடரவும் வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





