தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். நடிகர் தியாகராஜனின் மகன். இப்போது தி கோட் அந்தகன் படங்கள் மூலம் தனது 2வது சுற்றை தமிழ் சினிமாவில் ஆரம்பித்திருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் 55 என்ற புதிய படம் உருவாகிறது. இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே சொந்தமாக தயாரிக்கிறார்.
இந்த படத்தின் அறிமுக விழா நேற்று முன்தினம் 6ம் தேதி நடந்தது. நடிகர் பிரசாந்தின் 52வது பிறந்த நாளில் இந்த படம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் ஹரி நடிகர் பிரசாந்த் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன், நடிகர் ரவி மரியான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர் சந்திப்பும் நடந்தது.
இந்த விழாவில் நடிகர் பிரசாந்த் பேசியதாவது, என்னுடைய அப்பா தியாகராஜன் என் பிறந்த நாளுக்கு பிரசாந்த் 55 என்ற மிகப்பெரிய கிப்ட்டை கொடுத்திருக்கிறார். அது சாதாரண கிப்ட் கிடையாது. அதுவும் ஒரு மிகப்பெரிய டைரக்டர் ஹரி சாருடன் கொடுத்திருக்கிறார். நானும் ஹரியும் இணைந்து 25வது ஆண்டில் இப்போது என்ட்ரி ஆகிறோம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து ஆரம்பித்திருக்கிற இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும். ரசிகர்கள் எப்போதுமே நடிகர்களிடம் எதிர்பார்ப்பது கதையை ஒழுங்கா பண்ணுங்கடா திரைக்கதையை ஒழுங்கா பண்ணுங்கடா நல்லா நடிங்கடா, ஆடியன்ஸ் என்ன எதிர்பார்க்கிறாங்களோ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணுங்கடா என்பதுதான். அந்த மாதிரி இந்த படம் யார் யார் என்ன எதிர்பார்க்கிறீங்களோ அப்படி ஒரு படமாக இருக்கும்.
ஏனென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்னுடைய தந்தை தியாகராஜன். அவர் மிக சாதாரணமாக எல்லாம் படத்தை எடுக்க மாட்டார். மிக பிரமாண்டமாக தான் அவர் எடுப்பார். இந்த காலத்துல எப்படீப்பா என்று நான் கேட்டதற்கு, நீ எதுக்கு கவலைப்படறே, பண்றது எதையும் பெருசா பண்ணுவோம், கமான் என்று என்னிடம் கூறி உள்ளே இறங்கி விட்டார். அவருக்கு என் நன்றி.
ரசிகர்கள் என் மீது காட்டுகிற அபரிமிதமான அன்புக்கு பதிலாக அவர்களுக்கு நான் நல்ல படங்களை நிச்சயமாக தருவேன். தமிழ் படத்தை இப்போதும் ஒரு நல்ல படமாக எப்படி ரசிகர்கள் சொல்கிறார்களோ அதே போல் இந்த படத்தையும் இப்போது உள்ள தலைமுறையும், வருகிற தலைமுறையும் பாராட்டுகிற ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு சிறந்த படமாக அது இருக்கும் என நடிகர் பிரசாந்த் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





