நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மிஷ்கின் இயக்கிய ட்ரெயின் படமும் பாண்டிராஜ் இயக்கிய ஆகாசவீரன் படமும் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிகை தபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
அத்துடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஏற்கனவே விஜய் சேதுபதி கமிட் ஆன நிலையில், அந்த படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகுமாறு டைரக்டர் கூறியிருக்கிறார். இதனால் உடல் எடை குறைப்பில் விஜய் சேதுபதி ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிகர் சசிக்குமாரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் நடித்த போது விஜய் சேதுபதி பிரபலமாகாத துணை நடிகராக இருந்தார்.
இப்போது நடிகர் சசிக்குமாரை போலவே விஜய் சேதுபதியும் முன்னணி நடிகராக உள்ள நிலையில் இருவரும் இணைந்து நடிப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது பாண்டிராஜ் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடித்த பிறகே இந்த படத்தில் நடிக்க கால் ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார்.
விஜய் சேதுபதி சசிக்குமார் இணைந்து நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்ய உள்ளார். இவர் எதிர்நீச்சல் காக்கிச்சட்டை கொடி மறறும் கருடன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் ஒரு படத்தை துரை செந்தில்குமார் டைரக்ட் செய்து வருகிறார்.
ஏற்கனவே சூரி நடித்த கருடன் படத்தில் முக்கிய வேடத்தில் சசிக்குமார் நடித்திருந்தார். அப்போதே துரை செந்தில்குமாருக்கும் சசிக்குமாருக்கும் நல்ல நட்பு உள்ளது. லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி சசிக்குமார் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





