மாரி செல்வராஜ் தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் துருவ். சொல்லப்போனால் கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு, பைசன் படத்தை தான் மாரி செல்வராஜ் இயக்குவதாக இருந்தது. பா ரஞ்சித் தயாரிப்பில் அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின், தனது கடைசி திரைப்படத்தை இயக்குமாறு வேண்டுகோள் விடுக்க, மாமன்னனை எடுத்தார் மாரி செல்வராஜ். பலரும் எதிர்பார்த்தது போலவே அந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பிறகு கிடைத்த இடைவேளையில் வாழை திரைப்படத்தையும் மாரி செல்வராஜ் எடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது, துருவ் விக்ரமை வைத்து அவர் பைசன் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் வருகிறார். ரஜிஷா விஜயனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது போக லால், பசுபதி, கலையரசன், அழகம்பெருமாள், அருவி மதன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் கணேசனின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படத்தில் காட்டி இருக்கிறார் மாரி செல்வராஜ். இதற்காக கபடி விளையாட்டில் தீவிரம் காட்டியிருந்தார் துருவ் விக்ரம்.
பைசன் படம் நன்றாக வந்திருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை மே 16ஆம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுசை வைத்து தான் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார் மாரி செல்வராஜ். ஐசரி கணேஷ் இதனை தயாரிக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்க நாட்களாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர் கார்த்தி உடனும் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான பணியில் மாரி செல்வராஜ் உள்ளார். விக்ரமும் மாரியிடம் ஒரு கதையை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் தற்போது மூன்று நடிகர்களுமே பிஸியாக இருக்கிறார்கள். இதனால் கிடைக்கும் இடைவேளையில், வாழையை போன்றே ஒரு சிறிய திரைப்படத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





