தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர் வடிவேலு. 90களில் ஆரம்பித்த அவரது பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வடிவேலுவுக்கென தனி ரசிகர் பட்டாளம் இங்கு உள்ளது. வைகை புயலாக உருவெடுத்து பலரது மனதிலும் குடிகொண்ட வடிவேலு, நகைச்சுவையில் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.
அவரது ட்ராக் நன்றாக சென்று கொண்டிருக்க, திடீரென படங்களில் நடிப்பதை அவர் நிறுத்திக் கொண்டார். வடிவேலுவின் கம்பேக்கிற்காக பலரும் காத்துக் கிடந்திருந்த சூழலில், அதற்கான படம் எதுவும் வரவே இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு, வடிவேலுவின் நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வெளியானது.
ஆனால் அந்த திரைப்படம் அந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து, கிடைத்த படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்திலும் இடம்பெற்றார். அதில் அவருக்கு அரசியல்வாதி கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் மாரி செல்வராஜ்.
தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்திருந்தார் வடிவேலு. வடிவேலுவை முழுக்க முழுக்க ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள், அவரைப் பாராட்டினர். நகைச்சுவையைக் கடந்து, பல்வேறு கதாபாத்திரங்களிலும் தற்போது வடிவேலு நடிக்க ஆரம்பித்து விட்டார். இதில் மாரீசன் திரைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதேபோல் சுந்தர்சியுடன் இணைந்து அவர் கேங்கர்ஸ் என்னும் படத்திலும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், அவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரை மறைமுகமாக சாடியுள்ளார். நகைச்சுவை என்பது கல்வெட்டு அல்ல. ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கும் போது அதைக் கண்டு அவர் ரசித்தார். எல்லாம் முடிந்து விட்டு பிரமாதமாக உள்ளது ஆனால் பேப்பரில் இருப்பதை மட்டும் செய்யுங்கள் என்று கூறினார்.
எனக்கு அது ஒத்து வராது என்பதால் அங்கிருந்து கிளம்பி விட்டேன். இதன் காரணமாக நான்கு வருடங்களுக்கு மேல் நான் நடிக்காமல் இருந்தேன். அந்த இயக்குனர் யார் என்று உங்களுக்கே தெரியும் நான் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் அவர் குறிப்பிட்டது இயக்குனர் சங்கரைதான் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர்தான் தயாரித்தார். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வடிவேலு அதிலிருந்து விலகினார். இதனால் தனக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறி சங்கர் வழக்கு தொடுத்தார். அதன் காரணமாக சில காலங்கள் வடிவேலு நடிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.





