இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்த நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடந்த நிலையில் 2 வாரங்கள் அங்கு முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை நெல்சன் முடித்து விட்டார். பிறகு கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் ஜெயிலர் 2 படத்தின் 2வது ஷெட்யூல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து முடித்துவிட்டு 2 தினங்களுக்கு முன் சென்னை திரும்பி விட்டார்.
இதுவரை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்துடன் 170 படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்து அவரது 171வது படம் கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரஜினிகாந்த் அவர் நடித்த எந்த ஒரு படத்திலும் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. ஜெயிலர் 2 படம்தான் அவர் நடிக்கும் முதல் 2ம் பாகம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் மலையாள நடிகர் விநாயகன் வில்லன் கேரக்டரில் அதகளம் செய்திருந்தார். மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் சுனில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் போன்ற நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடித்து படத்துக்கு பெரிய அளவில் வலிமை சேர்த்தனர்.
இந்நிலையில் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற நந்தமுரி பாலகிருஷ்ணாவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில்தான் புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் நடிகர் அஜீத்குமாரும் பத்மபூஷன் விருது பெற்றார்.
ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பது உறுதியான நிலையில், அவர் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரிய வந்துள்ளது. வழக்கமாக தனது படங்களில் ஓடுகிற ரயிலை ஓங்கி உதைத்து தள்ளி விடுபவர் பாலய்யா. எதிரில் வரும் லாரியை ஒற்றை கையை நீட்டி தடுத்து நிறுத்துபவர். வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டரை தாவிப்பிடித்து ஏறுபவர். இப்படிப்பட்ட ஒரு சூப்பர் மேன் நடிகர் ஜெயிலர் 2 படத்தில் என்ன சாகசம் எல்லாம் காட்டப் போறாரே என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





