சிம்பு தற்போது தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மணிரத்னம் இதனை இயக்கியுள்ளார். கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் முன்பாக ரவி மோகன் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்கள் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இப்படியான சூழலில்தான் தக் லைப் திரைப்படத்தில் உள்ளே வந்தார் சிம்பு. அவருக்கு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோல் அசோக் செல்வனும் படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
அண்மையில் தக் லைப் திரைப்படத்திலிருந்து வெளியான சிங்குச்சா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சிம்பு. இதில் அவரது 49வது திரைப்படத்தை பார்க்கிங் படத்தை எடுத்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி பட பூஜையும் நடைபெற்றது. இதில் சந்தானம் இடம்பெற்று இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்துவரும் சந்தானம், இந்த முறை சிம்புவுடன் கைகோர்த்து இருக்கிறார். கயாடு லோகரும் படத்தில் உள்ளார். படத்தில் கலக்கலான கல்லூரி மாணவராக வருகிறார் சிம்பு.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அவரது ஐம்பதாவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதேபோல் 51ஆவது காவியம் டிராகன் பட வெற்றி இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் எடுக்கப்படுகிறது. அனேகமாக இந்த ஆண்டு இறுதியிலேயே அஸ்வந்த் மாரிமுத்து உடனான படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தக் லைப் தொடர்பான நிகழ்ச்சியில் சிலம்பரசன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், மணிரத்னம் போன்று எனக்கு இயக்குனர் கிடைத்திருந்தால் எனது ரசிகர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். நானும் நிறைய திரைப்படங்கள் கொடுத்திருப்பேன். நான் படப்பிடிப்புக்கு செல்வதில்லை என்று பலரும் இங்கு நினைக்கிறார்கள். நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எனக்கு சினிமாவை தவிர இங்கு வேறு எதுவும் தெரியாது என்று பேசியுள்ளார்.





