நடிகர் ரஜினிகாந்த் படங்களில் யார் நடித்தாலுமே, அவர்களுக்கு என ஒரு முக்கியத்துவம் கிடைத்து விடுகிறது. அதன்மூலம் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தானாகவே அமைந்துவிடும். அதனால் சம்பளத்தை குறைத்துக்கொள்கிறேன், அல்லது சம்பளமே வேண்டாம், ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்புக்கொடுங்க என கேட்கும் நடிகர், நடிகையர் உண்டு.
அந்தளவுக்கு சூப்பர் ஸ்டார் படங்களில் நடிப்பது, மாஸ் ஆன விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. ரஜினிக்கு மனைவியாக குமுதவல்லி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார். அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பிளாஸ்பேக்கில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இப்போது, பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கேமியோ ரோலில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் செய்துள்ள அந்த பதிவுதான் இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு காலை 8.30 மணிக்கு விமானம் வரும் என்றனர். ஆனால், பல மணி நேரமாகியும் விமானம் வரவில்லை.
ஆனால் விமானத்தில் ஏற்றுவது போல என்னையும், அங்கிருந்த பயணிகளையும் ஏரோ பிரிட்ஜில் அழைத்து வந்து ஒரு பெரிய ரூமில் வைத்து அடைத்து விட்டனர். சிறிய குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என மணிக்கணக்கில் அடைபட்டு இருக்க மிகவும் அவதிப்படுகிறோம். பாதுகாப்பு கருதி கதவுகளை திறக்க மறுக்கின்றனர்.
மேலும் விமானம் வருகை குறித்த எந்த தகவலையும் சொல்ல விமான நிலைய ஊழியர்கள் மறுக்கின்றனர். எந்த தகவலையும் அவர்களிடம் இருந்து பெற முடியவில்லை. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி பூட்டிய அறைக்குள் வைத்திருப்பார்கள் என தெரியவில்லை.
https://www.instagram.com/p/C2B08wWNcMm/?utm_source=ig_web_copy_link
இந்த அறைக்குள் குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை. பலரும் தாகத்தில் தவிக்கின்றனர். பாத்ரூம் செல்லவும் போதிய வசதியில்லை. எப்போது இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரியவில்லை என்று ராதிகா ஆப்தே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எந்த விமான நிலையம், எந்த நகரம் போன்ற விவரங்களை அந்த பதிவில் அவர் குறிப்பிட மறந்திருக்கிறார். இந்த பதிவும், வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.





