தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் தெறி கத்தி நீதானே என் பொன்வசந்தம் தங்கமகன் விண்ணைத் தாண்டி வருவாயா சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது இந்தியிலும் சமந்தா நடித்து வருகிறார். அவரது சிட்டாடல் என்ற இந்தி வெப் சீரிஸ் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 2021ம் ஆண்டில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். சட்டப்படி விவாகரத்தும் பெற்ற நிலையில், கடந்தாண்டில் நடிகை சோபிதா துலிபாலாவை நாகசைதன்யா 2வது திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு நடிகை சமந்தாவை படங்களில் நடிக்க கூடாது என அவரது கணவர் நாகசைதன்யாவும் அவரது குடும்பத்தினரும் வலியுறுத்தியதால் அந்த காரணத்தால் அவர்கள் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. சமந்தாவின் முன்னாள் மாமனார் நடிகர் நாகர்ஜூனா என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடித்துள்ள கூலி படத்திலும் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்திலும் நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.
தனது திருமண உறவு முறிவுக்கு பிறகு மீண்டும் படங்களில் ஆர்வமாக சமந்தா நடித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மயோசிடிஸ் என்ற நோய் தாக்கம் ஏற்பட்டது. தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட அவர் பலவிதமான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு 3 ஆண்டுகளாக நோயுடன் போராடிய நிலையில் இப்போது மீண்டு வந்துள்ளார். தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வீடியோ ஒன்றை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். அதில் சமந்தா கூறியிருப்பதாவது, பிரகாசமான விளக்குகளை பார்க்கும்போது என் கண்கள் கூசுவதால் இயற்கையாகவே எனக்கு கண்களில் கண்ணீர் வருகிறது. அதனாலயே நான் அடிக்கடி கண்களை துடைத்துக் கொள்கிறேன். ஆனால் நான் மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழுவதைப் போன்று பலர் சித்தரிக்கின்றனர்.
என்னுடைய மனநலனை கேள்விக்குள்ளாக்கி பலர் இப்படி தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். அது முற்றிலும் தவறானது. நான் நலமுடன் உள்ளேன். இதற்கு முன் இதைக் கூறியிருந்தாலும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என்று நடிகை சமந்தா அந்த வீடியோ மூலம் விளக்கம் தந்துள்ளார்.





