கடந்த 2015ம் ஆண்டில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்ற படம் தனி ஒருவன். ஜெயம் ரவி பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு முக்கியமான படமாக இருந்தது. இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா டைரக்ட் செய்திருந்தார்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி அசத்தலான நடிப்பை தந்திருந்தார். மேலும் படத்தில் நாயகியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அபிநயா தம்பி ராமையா கணேஷ் வெங்கட்ராமன் ஜெயப்பிரகாஷ் நாசர் வம்சி கிருஷ்ணா ஹரீஷ் உத்தமன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனி ஒருவன் படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இயக்குனர் மோகன் ராஜாவும் திட்டமிட்டனர். இதுகுறித்த அறிவிப்பு 2023ம் ஆண்டில் ஒரு வீடியோவுடன் வெளியானது. ஆனால் அதற்கு பின் ஷூட்டிங் துவங்கும் எந்த அறிகுறியும் இல்லை. இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் மோகன் ராஜாவும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் கலந்துக்கொண்டனர். அப்போது அவர்களிடம் தனி ஒருவன் 2 படம் ஷூட்டிங் எப்போது துவங்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முதலில் பதிலளித்த இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது, நல்ல வேளையாக தயாரிப்பாளருடன் இருக்கும்போது இந்த கேள்வியை கேட்டீங்க. தனிஒருவன் 2 படத்தின் மீது அவ்வளவு காதலை கொண்டுள்ள ரசிகர்களுக்கு நன்றி. எங்களுக்கு இது மிகவும் ஸ்பெஷலான படம். எப்போதும் அர்ச்சனா அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார். எங்களுடைய பெருமைக்குரிய படம் அது என்று. எல்லாமே ரெடியா இருக்கு. தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் சொல்கிறோம் என என்னிடம் கூறியுள்ளனர் என்று இயக்குனர் மோகன்ராஜ் கூறினார்.
அடுத்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது, நான் முதன் முதலில் விருது என்று வாங்கியது தனி ஒருவன் படத்திற்காகதான். எங்கள் தயாரிப்பில் உருவான தலைசிறந்த படங்களில் ஒன்று தனி ஒருவன். தனி ஒருவன் 2 மிகப்பெரிய படம். முதல் பாகம் போல் இல்லை. ஆகையால் அதற்கான சரியான நேரத்தை பார்த்து படத்தை துவங்க இருக்கிறோம். கண்டிப்பாக வரும். படத்தில் நிறைய ஆர்ட்டிஸ்ட் இருக்கிறாங்க. ரவி நயன்தாரா இருக்காங்க. சரியான நேரத்தைத் தான் தற்போது தேர்ந்தெடுக்க வேண்டும். தனி ஒருவன் 2 பயங்கரமான ஸ்கிரிப்ட் ஆக உள்ளது என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார்.





