கடந்த 1987ம் ஆண்டில் நடிகர் கமல் நடித்த நாயகன் படத்தை இயக்கியவர் மணிரத்னம். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வேலு நாயக்கர் கேரக்டரில் நடித்த நடிகர் கமலுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது. இப்போது 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் தக்லைஃப் படத்தில் நடித்திருக்கிறார்.
வருகிற ஜூன் 5ம் தேதி தக்லைஃப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் மணிரத்னம் நடிகர்கள் கமல் சிம்பு திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்று படம் குறித்து பேசி வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
நாயகன் படத்துக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தக்லைஃப் படத்தில் கமல் நடித்திருக்கிறார். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் தளபதி. கடந்த 1991ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. ரஜினியுடன் மலையாள நடிகர் மம்முட்டி அரவிந்த் சாமி ஷோபனா ஜெய்சங்கர் ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஆனால் தளபதி படத்துக்கு பிறகு ரஜினி மணிரத்னம் மீண்டும் இணைந்து படம் செய்யவில்லை. ஏறக்குறைய 33 ஆண்டுகள் கடந்த நிலையில் எத்தனையோ இயக்குனர்களின் படங்களில் நடித்த ரஜினிகாந்த், மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கவே இல்லை. அதே போல் பல படங்களை இயக்கிய மணிரத்னம் ரஜினியின் படத்தை இயக்க ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் கமலுடன் தக்லைஃப் படத்தில் 2வது முறையாக இணைந்த நீங்கள், தளபதிக்கு பிறகு மீண்டும் 2வது முறையாக ரஜினியுடன் இணைவீர்களா, ரஜினி நடிக்கும் இயக்கும் படத்தை இயக்குவீர்களா என்று சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் பங்கேற்ற ஒரு நேர்காணலில் நேரடியாக கேட்கப்பட்டது.
அதற்கு இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, ரஜினி சாரை தான் கேட்கணும். அவருக்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால் அவருக்கும் அதைக் கேட்க நேரம் இருந்தால் கண்டிப்பாக என்னுடன் மீண்டும் ஒரு படம் பண்ணுமாறு கேட்பேன். ரொம்ப பெரிய ஸ்டாருடன் படம் பண்ணுகிறோம் என்றால் அதற்கேற்ற தீனி இருக்க வேண்டும். நான் ஒரு சாதாரணமாக கதையை வைத்துக் கொண்டு அவ்வளவு பெரிய ஸ்டார் கிட்ட போக முடியாது. அவர் பண்ணியதில் இருந்து வித்யாசமான படமாக பண்ணனும். அதேசமயம் அவருடைய மார்க்கெட்டையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குனர் மணிரத்னம் கூறியிருக்கிறார்.





