தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ராஜேஷ் தனது 75வது வயதில் நேற்று முன்தினம் காலை காலமானார். சென்னை ராமாவரம் பகுதியில் அவரது வீட்டில் இருந்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மறைவு கோலிவுட் வட்டாரத்திலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
அவருக்கு தீபக் திவ்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் திவ்யா, கனடாவில் இருப்பதால் அவரது வருகைக்காக 3 தினங்களாக நடிகர் ராஜேஷின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ராஜேஷின் திரையுலக நண்பர்கள் உறவினர்கள் ரசிகர்கள் என பலரும் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மகள் இன்று சென்னைக்கு வந்துவிட்டார்.
நடிகர் ராஜேஷின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் நாசர் கார்த்தி பார்த்திபன் சத்யராஜ் சிவக்குமார் விஷால் அஜய் ரத்னம் வையாபுரி எம்எஸ் பாஸ்கர் இயக்குனர் பேரரசு மற்றும் ராஜேஷூடன் கன்னிப் பருவத்திலே படத்தில் நடித்த வடிவுக்கரசி போன்றோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கடந்த 29ம் தேதியே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ராஜேஷ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதலும் கூறினார்.
அதைத் தொடர்ந்து மறைந்த நடிகர் ராஜேஷ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, நடிகர் ராஜேஷ் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதே சான்று. சினிமா அரசியல் விஞ்ஞானம் மெய்ஞானம் என அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது.
என்னை அடிக்கடி வந்து சந்திப்பார். நீங்கள் நீண்ட நாள் வாழணும். அதற்கு என்னென்ன செய்யணும், சாப்பிடணும் என்று எல்லாம் எனக்கு சொல்வார். நல்ல மனிதர். திடீரென அவர் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





