கடந்த வாரத்தில் 20ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து என்ற அறிமுக இயக்குனர் உருவாக்கிய இந்த படத்துக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த படத்தில் இரட்டை நாயகர்களாக ஹரீஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வெளியான 3 நாட்களில், 5.25 கோடி ரூபாய் வசூலித்தது. தொடர்ந்து இதுவரை 7 நாட்களில் 10.5 கோடி ரூபாயை வசூலில் கடந்திருப்பதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் குறைவான எண்ணிக்கையில் திரையிடப்பட்ட லப்பர் பந்து படம், இப்போது அதிக திரைகளில் திரையிடப்பட்டு, எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பிக் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கும் படம் மாற்றப்பட்டுள்ளது.
இப்போது ஒரு படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துவிட்டால், அடுத்த ஒரு வாரம் 10 நாட்களுக்குள், படத்துக்கு முதலீடு செய்த பட்ஜெட்டை விட பலமடங்கு அதிக லாபத்தை தயாரிப்பாளர்கள் அள்ளிவிட முடிகிறது. ஆனால் ஊடகங்கள் தரும் ஆதரவும், எதிர்ப்பும் இன்றைய சூழலில் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில் லப்பர் பந்து படம் பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து படம் குறித்த பாசிட்டிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்கள் பாராட்டும் ஒரு படம் நிச்சயமாக, தோல்வியை சந்திப்பதே இல்லை. அதே நேரத்தில் ரசிகர்கள் மொக்கை என்று விமர்சிக்கும் எந்த படமும் இப்போதைய சூழலில் பெரிய அளவில் வெற்றி பெறவும் வாய்ப்பு இல்லை.
இதற்கு சமீபத்திய உதாரணமாக தோல்வி பட வரிசையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படத்தை சொல்ல முடியும். அதே போல் வெற்றிப் படங்களாக வாழை, லப்பர் பந்து போன்ற படங்களை சொல்ல முடியும். ஏனெனில் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம், 33 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாழை படம் போலவே, லப்பர் பந்து படமும் இப்போது 20 கோடி ரூபாய்க்கு வசூலை கடந்திருக்க முடியும். படத்துக்கு அந்தளவுக்கு பெரிய வரவேற்பு இருந்தும், கடந்த 20ம் தேதி வெளியான மற்ற 6 படங்களுடன் ஒன்றாக வெளிவந்ததால், போதிய திரை கிடைக்கவில்லை. வசூலும் உச்சத்தை தொடவில்லை. இந்த படம் தனித்து வந்து, அதிக எண்ணிக்கையில் திரையிடப்பட்டு இருந்தால் வசூல் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.





