தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக திகழ்ந்து வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது பாலகிருஷ்ணா என்ற பெயரை கேள்விப்படாதவர்கள் கூட இருப்பார்கள். ஆனால் பாலய்யா என்ற பெயரை கேள்விபடாமல் இருக்க மாட்டார்கள். “ஜெய் பாலய்யா” என்று இவரது ரசிகர்கள் போடும் கோஷம் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் மிகப் பிரபலமான ஒன்று.

சமீபத்தில் பாலய்யா நடித்த “வீரசிம்ஹா ரெட்டி” திரைப்படம் அமெரிக்காவில் வெளியான போது அங்கே தெலுங்கு ரசிகர்கள் திரையரங்கில் செய்த ரகளையால் திரையரங்கு நிர்வாகத்தினர், ஓடிய படத்தை அப்படியே நிறுத்திவிட்டு திரையரங்கை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். அந்தளவுக்கு வெறித்தனமான ரசிகர்களாக பாலய்யா ரசிகர்கள் தென்படுவார்கள்.
நடிகர் பாலய்யா திரைப்படங்களில் செய்யும் அட்டகாசங்களை சமூக வலைத்தளங்களில் கேலி செய்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் பாலய்யா எது செய்தாலும் மாஸ்தான் என்பது போல் பார்ப்பார்கள். அந்தளவுக்கு ஒரு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார் பாலகிருஷ்ணா.

எனினும் பாலகிருஷ்ணா ஒரு முறை சென்னையில் ஒரு விழாவில் பேசியபோது, “நான் தமிழ்நாட்டு மண்ணில் வளர்ந்தவன், தமிழ்நாட்டு தண்ணியை குடித்து வளர்ந்தவன்” என்று கூறியது தமிழ் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானை குறித்து கேட்டபோது, “ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் யார்?” என்று பாலகிருஷ்ணா கேட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் பாலகிருஷ்ணாவிற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, “ஆஸ்கர் நாயகனாக உலகமே கொண்டாடிக்கொண்டு இருக்கிற ஏ.ஆர்.ரஹ்மானை பாலகிருஷ்ணா தனக்கு தெரியாது என்று கூறியது மிகவும் சர்ச்சையாக ஆனது. அது ஒரு விதத்தில் அவரது அப்பாவித்தனத்தை காட்டுகிறது. ஆனால் பாலகிருஷ்ணா இளையராஜா மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஒரு வேளை இளையராஜாவிற்கு கிடைக்காத ஆஸ்கர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துவிட்டதே என்ற கோபத்தில் கூட அவர் அப்படி பேசியிருக்கலாம்” என்று கூறியிருந்தார்.





