நடிகர் தனுஷ் நடிப்பில் வருகிற 20ம் தேதி குபேரா படம் ரிலீஸாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ராயன். கடந்தாண்டில் வெளியான இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. இது தனுஷின் 50வது படமாகவும் இருந்தது. அவரே டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு பின் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது.
நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமான இந்த படம் சரியாக ஓடவில்லை. அதே போல் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் உருவான இட்லி கடை படமும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, யாராக இருந்தாலும் உங்கள் சந்தோசத்தை தேடி வெளியில் போக வேண்டாம். அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். அதே சமயம் எந்த நிலையில் இருந்தாலும் என் சந்தோசத்தை நான் தவறவிட்டதில்லை. காரணம் நான் சந்தோசத்தை எப்போதுமே வெளியில் தேடியது கிடையாது. எனக்குள்ளே தான் தேடுவேன். சந்தோஷத்தை விட வாழ்க்கையில் முக்கியமானது எதுவும் கிடையாது.
எனக்காக என் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது. நான் ரொம்ப கொடுத்து வைத்தவன். இந்த விழா முடிந்ததும் அனைவரும் பத்திரமாக ஊருக்கு போய் சேர வேண்டும். தயவுசெய்து யாராக இருந்தாலும் என்னை பைக்கில் பின் தொடராதீர்கள். அதை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன். என்னுடைய சந்தோஷத்தை விட உங்களது பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம் என்று நடிகர் தனுஷ் தவெக தலைவர் விஜய் பாணியில் பேசியிருக்கிறார்.





