அமரன் திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கராவுடன் கைகோர்த்தார். ஏற்கனவே சுதா கொங்கரா சூர்யாவுடன் இணைந்து, புறநானூறு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதில் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், சுதாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக இந்த திரைப்படம் கைவிடப்பட்டது. இந்த சூழலில்தான் அந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு சென்றது. படத்திற்கும் புறநானூறு என்ற தலைப்பை மாற்றிவிட்டு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டது. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
கூடவே தெலுங்கு நடிகை ஸ்ரீலிலா, நடிகர் அதர்வா உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். இது தொடர்பான டைட்டில் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. சென்னை பச்சையப்பன் கல்லூரி பக்கத்தில் உள்ள வளாகம், பிறகு சிதம்பரம் காரைக்குடி இலங்கை என முழு வீச்சில் இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்று வந்தன. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தான் இதனை தயாரித்து வந்தார்.
ஆனால் நடுவே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இதன் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதாகவும், சின்ன சின்ன வேலைகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் சுதா கொங்கரா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். சிவகார்த்திகேயனுக்காக தான் வெயிட்டிங் என்றும் அவர் கூறியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க சிவகார்த்திகேயனோ தனது மதராசி திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார்.
அமரன் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே இதற்கான பணிகள் நடைபெற்றன. நடுவே, சல்மான் கான் உடன் இணைய இருந்ததால் ஏ ஆர் முருகதாஸ் பணிகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் இணைந்து மதராசி திரைப்படத்தின் பணிகளை முடித்துள்ளனர்.
அடுத்ததாக அவர் பராசக்தி படத்தின் வேலைகளில்தான் ஈடுபடுவார் என தெரிகிறது. இருப்பினும் அதில் தாமதம் ஏற்பட்டால் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படம் ஹை பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறதாம். மாநாடு திரைப்படத்தைப் போன்றே இதுவும், டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





