கடந்த 1987ம் ஆண்டில் வெளியான நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான படம்தான் தக்லைஃப். இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். திரிஷா அபிராமி அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரும் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். முதலில் படத்தின் கதை என்னவென்று பார்ப்போம்.
இதுவும் ஒரு கேங்ஸ்டர் சண்டை படம்தான். கேங்ஸ்டர் தலைவன் கமல்ஹாசனுக்கும் போலீஸூக்கும் நடக்கும் சண்டையில் சிம்புவின் தந்தை கொல்லப்படுகிறார். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்து விடும் சிம்பு அந்த சண்டையில் தனது தங்கையையும் பிரிந்து விடுகிறார். தந்தையை இழந்த சிம்புவை கமல் எடுத்து வளர்ப்பு மகனாக வளர்க்கிறார்.
சிம்பு வாலிபரான பிறகு தனக்கு அடுத்தது சிம்புதான் என்றும் தனது கேங்ஸ்டர் கூட்டத்தில் கமல் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். அந்த சூழலில் கமல்ஹாசன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதில் பலத்த காயமடையும் கமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார். அப்போது சிம்புதான் தன்னை கொலை செய்ய முயற்சித்தாரா என்ற சந்தேகம் கமலுக்கு வருகிறது. இதனால் மனம் உடைந்து போகும் சிம்பு கமல்ஹாசன் மீது வைத்த நம்பிக்கையை இழக்கிறார்.
இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளும் நாசர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் சிம்பு மூலம் கமலை தீர்த்துக் கட்ட திட்டமிடுகின்றனர். அவரை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளியும் விடுகின்றனர். கமல் இறந்துவிட்டார். இனிமேல் நான்தான் இங்கே ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று ஆவேசமாக டயலாக் பேசி கமல் இடத்தைப் பிடிக்கிறார் சிம்பு. இதற்கு பின்னால்நடந்தது என்ன, படத்தில் கமல் மீண்டும் வந்தாரா என்பதை தக்லைஃப் படத்தின் மீதிக்கதை.
ஆமை வேகத்தில் மெதுவாக செல்லும் திரைக்கதை, சிறிதும் சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், வலுவில்லாத கேரக்டர்கள் என பல விஷயங்களில் இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்பதே கசப்பான உண்மை. படத்தின் பல காட்சிகளில் ரசிகர்களின் பொறுமையின் அளவை ரொம்பவும் சோதிக்க வருகிறது. குறிப்பாக படத்தின் முதல் பாதி ரசிகர்களை விரக்தியின் எல்லைக்கே செல்ல வைத்து, இந்தியன் 2 பார்த்த பிறகும் திருந்தாமல் மீண்டும் இங்கு வந்துவிட்டோமா என்று கேட்க வைக்கிறது.
திரிஷாவின் கேரக்டர் தக்லைஃப் படத்தில் எதற்காக உள்ளது என்று தெரியவில்லை. மணிரத்னம் கமல் திரிஷா போன்றவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் தக்லைஃப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எமோஷனல் கனெக்ட் என்பது இந்த படத்தில் சுத்தமாக இல்லை. நாயகன் படம் போல் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. கமல், சிம்புவின் நடிப்பு மற்றும் சண்டை காட்சிகளுக்காக இந்த படத்தை ஒருமுறை ‘கஷ்டப்பட்டு’ பார்க்கலாம்.





