நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்து அந்த படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன. தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம்தான் வேட்டையன். கடந்த ஆண்டில் இந்த படம் வெளியானது. அடுத்து ரஜினி நடித்த 171வது படம் கூலி. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் இப்போது ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர் 2 படம் 172வது படமாகும்.
கடந்த 1975ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். இப்போது 50வது பொன்விழா ஆண்டில் 2025ம் ஆண்டில் ரஜினிகாந்த் தனது 172 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்து முத்து தளபதி பாட்ஷா போன்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் ரசிகர்களால் விண்டேஜ் படங்களாக கொண்டாடப்பட்டன.
சமீபகாலமாக முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கமல் நடித்த ஆளவந்தான் குணா போன்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டன. விஜய் நடித்த கில்லி சச்சின் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக அவர் நடித்த சிவகாசி குஷி ஆகிய படங்கள் ரி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி நடிகர் சேரன் நடித்த ஆட்டோகிராப் படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதே போல் பல சூப்பர் ஹிட் படங்களை ரி ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளில் அந்தந்த படங்களில் தயாரிப்பாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான வருகிற டிசம்பர் 12ம் தேதி ஒரு மாஸ் ஹிட் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல வெற்றிப் படங்களில் அண்ணாமலை படம் மிக முக்கியமானது. கவிதாலயா புரடக்சன்ஸ் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்தார். இந்த படத்தில் நாயகியாக குஷ்பு நடித்திருந்தார். சரத்பாபு ரேகா வைஷ்ணவி நிழல்கள் ரவி மனோரமா ராதாரவி ஜனகராஜ் கரண் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில்தான் கொண்டையில் தாழம்பூ பாடல் இடம்பெற்றது. அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட் ஆனது. நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ரஜினி சாதாரண பால்கார அண்ணாமலையாக இருந்து கோடீஸ்வர அண்ணாமலையாக மாறுவதே கதை. கடந்த 1992ம் ஆண்டில் வெளியான இந்த படம் வருகிற டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளில் ரி ரிலீஸ் ஆகிறது என தகவல் வெளியாகி உள்ளது.





