இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக திகழும் ரஜினிகாந்த், புகழின் உச்சியில் இருப்பவர் என்பதை பலரும் அறிந்திருப்போம். அவர் நடிக்க வந்த புதிதில் சினிமாவிற்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கும் தன்மையோடு இருந்தார். இப்போதும் அவர் அப்படித்தான் என்று சினிமா கலைஞர்கள் பலரும் கூறுவார்கள்.

ரஜினிகாந்த் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருந்தாலும் அவருக்கு மிகப் பெரிய பெயரை கொடுத்த திரைப்படம் “16 வயதினிலே”. ரஜினிகாந்த் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் “16 வயதினிலே” திரைப்படம் அவருக்கு மிகவும் திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இதில் அவர் ஏற்று நடித்திருந்த “பரட்டை” என்ற கதாபாத்திரம் இப்போதும் மிகப் பிரபலமான கதாபாத்திரமாகும். “இது எப்படி இருக்கு” என்ற தனது சிக்னேச்சர் வசனத்தை ரஜினிகாந்த் முதன்முதலில் இத்திரைப்படத்தில்தான் பேசினார்.
இத்திரைப்படத்தில் ஸ்ரீதேவியிடம் தவறாக நடந்துகொள்ளும் கதாபாத்திரமாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். அப்போது ஸ்ரீதேவி ரஜினியின் முகத்தில் காரி துப்பவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்ததாம். இந்த காட்சியில் ஸ்ரீதேவி துப்புவது போல் தனியாக படமாக்கிவிட்டார்கள். அதன் பின் அதனை மேட்ச் செய்வதற்காக ரஜினியின் முகத்தில் எச்சில் விழுந்ததற்கான அடையாளமாக சோப்பு நுரையை தெளித்தார்களாம்.

ஆனால் அதில் இயக்குனர் பாரதிராஜாவிற்கு திருப்தியே வரவில்லையாம். அப்போது ரஜினிகாந்த், “என்ன ஆச்சு?” என கேட்க, அதற்கு பாரதிராஜா, “உன் முகத்துல எச்சில் துப்பியது போன்ற உணர்வு எனக்கு வரவில்லை” என்று கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த், “பரவாயில்லை, நீங்க என் மூஞ்சில காரி துப்புங்க” என கூறியிருக்கிறார். அதன் பிறகு அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். இவ்வாறு ஒரு டெடிகேஷனான நடிகராக திகழ்ந்திருக்கிறார் ரஜினிகாந்த்.





