தமிழ் சினிமாவில் ஒரு சாதனை நாயகனாக சகலகலா வல்லவனாக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். தன்னிகரற்ற ஒரு மாபெரும் கலைஞன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. திரைக்கலைஞனாக அவரது சாதனைகளின் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் கமல் என்றால் அது மிகையல்ல.
ஆனால் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த அவர் மிக மோசமான வரவேற்பை தான் மக்களிடம் பெற்றார். நடிகராக அவரை கொண்டாடிய ரசிகர்கள் அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. அதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கொள்கைளும் கூட முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் திமுகவை தாறுமாறாக விமர்சித்து வாரிசு அரசியல் செய்வதாக வீரவசனம் பேசிய கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சமடைந்து அவர்களது அன்புக்குரியவராக மாறிவிட்டார். இப்போது திமுக தந்த ஆதரவால் ராஜ்யசபா எம்பியாகவும் வலம் வருகிறார். திமுகவின் விசுவாசியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் மாநில அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கிறார். மாவட்டம் வாரியாக சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விஜய் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைகடல் என திரண்டு வந்து ஆதரவு தருகிறது.
நடிகர்களை பார்க்கிற வருகிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்று சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்ய தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், நிச்சயமாக கூடுகிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. இது எல்லா தலைவர்களுக்குமே பொருந்தும்.
எனக்கும் அது பொருந்தும், தம்பி விஜய்க்கும் அது பொருந்தும். அதனால் விஜய்க்கு சொல்கிற நான் அறிவுரை என்னவென்றால் நல்ல பாதையில் செல்லுங்கள் தைரியமாக முன்னேறுங்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்பதுதான். எனது சகோதரர் நடிகர் மோகன்லாலுக்கு தாதே சாகிப் பால்கே விருது கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கமல் கூறியிருக்கிறார்.





