சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருப்பவர் சிவகார்த்திகேயன். கடந்த 2012 ஆம் ஆண்டு மெரினா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை, ஹீரோ என பல வெற்றிப் படங்கள் இவரது தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதேபோன்று டாக்டர் மற்றும் டான் என இவரது படங்கள் மிகப்பெரிய லாபத்தை தந்திருந்தாலும் கடைசியாக பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது.
ஆனால் அதன் பிறகு தற்போது மாவீரன் படத்தின் வெற்றியின் மூலம் இழந்த தனது மார்க்கெட்டை மீண்டும் சிவகார்த்திகேயன் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் படமும் தயாராகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் தனது சம்பள விவரம் குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் பேசுகையில் : மெரினா படத்திற்காக 25 நாட்கள் ஷூட்டிங் செய்த பிறகு அவர் பாண்டிராஜ் இடமிருந்து முதல் சம்பளமாக பத்தாயிரம் ரூபாய் பெற்றுள்ளார். அதே வேளையில் ரஜினி முருகன் படத்திற்கு முன்னாள் வரை தான் இரண்டு முதல் மூன்று கோடி சம்பளம் வாங்கியதாகவும், ரஜினி முருகன் படத்தின் போது மூன்று கோடியை தாண்டியதாகவும் அவரே கூறியிருந்தார். அதன் பிறகு தனது சம்பளத்தை உயர்த்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ரஜினி முருகன் படம் 2015-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் கடைசியாக நடித்து முடித்த மாவீரன் படத்திற்காக 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் மாவீரன் படம் வெற்றியை தொடர்ந்து இனிவரும் படங்களில் அவர் முப்பது கோடிக்கு மேல் சம்பளத்தை பெற இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் அவர்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் படமும் வெளியாவதற்கு முன்னதாகவே பெரிய அளவில் பிசினஸ் செய்யப்படுவதால் சிவகார்த்திகேயன் சம்பளம் தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.





