நடிகர் விதார்த், தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமாக நடிக்கிற, இயல்பாக கேரக்டரை வெளிப்படுத்துகிற சில நடிகர்களில் மிக முக்கியமானவர். துவக்கத்தில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக, அடியாட்களில் ஒருவராக சில காட்சிகளில் மட்டுமே காணப்பட்ட விதார்த், பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடித்து, இப்போது பெயர் சொல்லும் படியாக ஒரு இடத்தில் விதார்த் இருக்கிறார். சமீபத்தில் வெளியான குய்கோ படத்தில் விதார்த் நடித்திருந்தார். வேதாளம் படத்தில் அஜீத்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார். ஜன்னல் ஓரம் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற விதார்த், ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார். அதன்பின் ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, நடிகர் நெப்போலியனுடன் அன்பறிவு என்ற படத்தில் நடித்தேன். முதன்முறையாக நெப்போலியனை அப்போதுதான் சந்திக்கிறேன்.
அந்த படப்பிடிப்பு நடந்த 42 நாட்களும் காலையில் அவரது அறையில்தான் நான் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டேன். எனக்காக அவர் சாப்பிடாமல் காத்திருப்பார். மதியம் லஞ்ச், இரவு டின்னர் என 42 நாட்களும் அவருடன்தான் சாப்பிட்டேன். என்னிடம் அவரது பர்சனல் விஷயங்களை எல்லாம் அவர் பகிர்ந்துக்கொண்டார். அது எனக்கு மிகவும் இன்வால்வ் ஆக இருந்தது.
என் குழந்தையின் ஸ்கூல் பீஸ் மொத்தத்தையும் அவரே கட்டிவிட்டார். நான் பணம் கொடுத்த போது வாங்க மறுத்துவிட்டார். எனக்கு ஆத்மார்த்தமாக அவரை மிகவும் பிடித்துப்போனது. அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அவரிடம் தகவல் சொல்லாமல், சர்ப்ரைஸ் ஆக நான் அமொிக்கா சென்றேன். என்னை பார்த்ததும் மிகவும் ஆச்சரியப்பட்டு, சந்தோஷப்பட்டார். ஐந்து நாட்கள் என்னை அப்படி பார்த்துக்கொண்டார்.
என்னை போலவே அங்கு இருக்கிற அனைவருமே அவரை பாராட்டி புகழ்ந்துதான் பேசுகின்றனர். ஏனெனில் மிகச்சிறந்த மனிதராக அங்கு மன்னர் போல வாழ்கிறார். அதுபோல் வாழ கொடுப்பினை வேண்டும். 800,900 பேர் அவர் பிறந்த நாளை நான்கு நாட்கள் தங்கி கொண்டாடி சென்றனர். கடவுளின் ஆசிர்வாதமாக அவரது வாழ்க்கை இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நடிகர் விதார்த்.





